Wednesday 27 March 2013

கனவில் ஏற்பட்டு வளர்ந்த காதல் !

                        கனவில் ஏற்பட்டு வளர்ந்த காதல்
                             ~~~~~~~~~~~~~~~
       காதலனுக்கும் காதலிக்கும் இடையில் ‘கனவிலே காதல் ஏற்பட்டு வளர்ந்தது’ என்பதை நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ் இலக்கியம் கண்டதை நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம்!

அறிந்துகொள்வோமா?

        அது ஒரு நாடக இலக்கியம். முழுவதும் கவிதையாய் எழுதப்பட்ட ஒன்று.

 நாடகத்தின் சுருக்கம் இதுதான்-

     பாண்டிய மன்னன் சீவகன் வஞ்சகமும் சுயநலமும் மொத்த உருவான அமைச்சன் குடிலன் என்பவனால் பல இன்னல்களுக்கு ஆளாகின்றான்.
     பாண்டிய இளவரசியும் சேர நாட்டு மன்னன் புருடோத்தமனும் ஒருவரை ஒருவர் தத்தம் கனவில் காண்கின்றனர்; இருவரும் ஒருவர் மீது ஒருவர் கனவிலேயே காதல் கொள்கின்றனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கனவு வளர வளர காதலும் வளர்ந்தது.

      இந்நிலையில், நாட்டையே கவரும் நோக்கில்  மன்னன் சீவகனின் ஒரே மகளான இளவரசியைத் தன் மகனுக்கு மணமுடிக்கவும் அமைச்சன் திட்டம் தீட்டியவேளையில், பாண்டிய மன்னனுக்கு அமைச்சனால் கேடுவர இருப்பதை உணர்ந்து மன்னனைக் காக்க முற்பட்டு அதில் வெற்றியும் அடைகின்றார்    அரச குரு சுந்தர முனிவர்.

       இறுதியில், தத்தம் கனவில் கண்டு மகிழ்ந்த நாயகனும் நாயகியும்  நேரில் சந்தித்து வாழ்க்கையில் இணைகின்றனர். அமைச்சனின் தீய குணமும், சூழ்ச்சியும் மன்னனுக்கு வெளிப்பட, அரசகுரு சுந்தர முனிவரால் மன்னன் தெளிவு பெறுகிறான்.
       இந்நாடக இலக்கியத்தை இயற்றிவர், பேராசிரியர்பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள். கதையில் வரும் பாண்டிய இளவரசியின் பெயர்-மனோன்மணி.
       ஆம், உங்கள் யூகம் சரிதான். அவ்விலக்கியத்தின் பெயர் ‘‘மனோன்மணியம்’’.


     சுந்தரம் பிள்ளையின் ஞான குருவாகிய கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் மீதிருந்த பற்றின் காரணமாய் மனோன்மணியத்தில்சுந்தர முனிவர்’ என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கியிருந்தார் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை.

      ‘மனோன்மணியம்’தமிழ் மொழியில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையானதாகப் போற்றப்படுகின்றது. முழுவதுமாய் செய்யுள்  நடையில் அமைந்த இந்நூல் சுந்தரம் பிள்ளை அவர்களால்  கி.பி. 1891ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

      இதில் மற்றொரு சிறப்பும் இருக்கின்றது.   தமது நாடக நூலான மனோன்மணியத்திற்காக,  50 வரிகளுக்கும் மேற்பட்டதமிழ்த் தெய்வ வணக்க’ பாடலாக சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய பாடலின் சுருக்கமே தற்போது தமிழ்கூறும் நல்லுலகமெங்கும் பாடப்படும்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான

‘‘நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
என்பதே அது.

            இப்பாடல், சுருக்கப்பட்டு தமிழ் நாடு அரசால் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடலாக 1970 ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

             122 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதத்தில்தான் தமிழ் மொழியின்  நாடக இலக்கியங்களில் முதன்மையான ‘மனோன்மணியம்’ பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது, அதன்மூலமாய் இப்போதைய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் வெளிவந்தது.
                            *************

(ஓவியம், ஓவியர்- ம.செ. வினுடையது என்னால் எடுத்தாளப்பட்டது)

No comments:

Post a Comment