Tuesday, 8 January 2013

1. பிராமணர்களுக்குப் ‘ பார்ப்பார் ’ என்னும் பெயர் வந்தது எப்படி?


1.
பிராமணர்களுக்குப்பார்ப்பார் என்னும் பெயர் வந்தது எப்படி?

  பிராமணர்களுக்குத் தமிழ்நாட்டில், பொதுவில், பார்ப்பார்; ஐயர்; அந்தணர் என மூன்று பெயர்கள் வழங்கி வருகின்றன. வழக்கில் இவற்றை ஒரே வகுப்பினரைக் குறிக்கும் மூன்று பெயர்களாய்க்கொள்வது பிழையாகும். இம்மூவற்றையும் நன்கு ஆராய்ந்த அறிஞர் கூற்றை உற்றுநோக்கின் உண்மையான பொருள் விலங்கும்.

பார்ப்பார்
      பார்ப்பார், அல்லது பார்ப்பனர் என்னும் பெயருக்கு மறை நூல்களைப் பார்ப்பவர் என்பது பொருள். ஆரியர் வருவதற்கு முன்பே, தமிழருக்கு மறைநூல்கள் இருந்தன.  தமிழ் மறைநூல்களைப் பார்ப்பதும் மற்றும் வழிபாடு, திருமணம் முதலியவற்றை நடத்துவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு, பார்ப்பனர் என்னும் பெயருடன் ஒரு குலத்தார் முன்னமேயிருந்து, பின்பு ஆரியப் பிராமணர் வந்தபின் தம் தொழிலையிழந்து விட்டனர்.

             ஆரியப் பிராமணர் தமிழப் பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின், தாமும் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின், வடமொழிப் பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்கிவரக் காரணமில்லை.

 எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் எனப்படுபவர்கள், தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, ‘தோலின் துன்னர்’ என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும்.

       பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. “பாணர்க்குச் சொல்லுவதும்.... தை....” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும்.
       
       
சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்டபின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி என்னும் தெலுங்கப் பெயரும் இன்று வழங்கி வருகின்றன.

    இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்பதாயிற்று.


-ஆராய்ந்தறிந்து கூறியவர் :

'மொழி ஞாயிறு' ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்.


No comments:

Post a Comment