Thursday 31 January 2013

தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ நிலை.




தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் உரிய பருவ
நிலை.

 தமிழில், பெண்ணிற்கும் ஆணிற்கும் பருவ நிலை கீழ்கண்டவாறு வகுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் பருவங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பேதை =5 முதல் 8 வயது.
பெதும்பை = 9, 10 வயது.
மங்கை = 11 முதல் 14 வயது.
மடந்தை = 15 முதல் 18 வயது.
அரிவை = 19 முதல் 24 வயது.
தெரிவை = 25 முதல் 29 வயது.
பேரிளம்பெண் = 30 முதல் 36 வயது.

அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’      

பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’           
பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’      
மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’              
மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
 திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’          
அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’           
தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’           
 ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
 பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’           


ஆணின் பருவங்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாலன் = 7 வயது.
மீளி =8 முதல் 10 வயது.
மறவோன் = 11 முதல் 14 வயது.
திறலோன் = 15 வயது
காளை = 16 வயது.
விடலை = 18 முதல் 30 வயது.
முதுமகன் = 30 வயக்கு மேல்.


     ‘காட்டிய முறையே நாட்டிய ஆண்பாற்கு
     எல்லையும் பெயரும் இயல்புற ஆய்ந்து
     சொல்லிய தொன்னெறிப் புலவரும் உளரே.’     

     ‘பாலன் யாண்டே ஏழ்என மொழிப.’                  
     ‘மீளி யாண்டே பத்துஇயை காறும்.’             
     ‘மறவோன் யாண்டே பதினான் காகும்.’        
     ‘திறலோன் யாண்டே பதினைந்து ஆகும்.’            
     ‘பதினாறு எல்லை காளைக்கு யாண்டே.’       
     ‘அத்திறம் இறந்த முப்பதின் காறும்
     விடலைக்கு ஆகும்; மிகினே முதுமகன்.’         

     ‘நீடிய நாற்பத் தெட்டின் அளவும்
     ஆடவர்க்கு உலாப்புறம் உரித்துஎன மொழிப.’    
 

இவ்வாறாக ஆண், பெண் பருவ நிலை பகுக்கப்பட்டிருப்பதால் இயல்பில் எழக்கூடிய ஐயங்கள்:-

1.ஆணிற்கு முதுமகன் தான் கடைசி பருவ நிலையா ?

2. அவ்வாறெனில், ஆணிற்கு’ கிழவன்’ என்பது எந்த வயதிலிருந்து தொடங்குகிறது? அல்லது முதுமகன் என்றாலே கிழவன் என்று தான் பொருளா ?

3.பெண்ணிற்கு ‘
பேரிளம் பெண்என்பது தான் கடைசி பருவ நிலையா ?
அப்படியெனில் 36 வயதைக்கடந்த பெண்களைகிழவி’ என்று அழைக்கலாமா ?

     சதுரகராதியில் இடம்பெற்ற தொடையகாராதியானது ‘பருவம்’ என்ற சொல்லிற்கு ‘இளமை’ என்று பொருள் கூறுகின்றது.

     எனவே, இத்தொடையகாராதியின் உதவிகொண்டு நோக்கின் ஆணின் இளமையின் இறுதி நிலை "முதுமகன்" என்பதாய் இருப்பதையும் பெண்ணின் இளமையின் இறுதி நிலை "பேரிளம்பெண்" என்பதாய் இருப்பதையும் உணரலாம்!

      மேலும், தொடையகாராதி, இளமைக்கு அடுத்தது "மூப்பு" என்ற பொருள்தரும் வகையிலேயே  "கிழவர்" எனும் சொல்லுக்கு "மூப்புடையோர்" என்ற பொருளையும். "கிழவி" எனும் சொல்லுக்கு "மூப்புடையாள்" என்ற பொருளையும் சுட்டுவதை உற்றுநோக்கின் மேலே கூறியவை மிகச்சரியென  உறுதிப்படுகின்றது !

2 comments:

  1. மிகவும் அருமையான பகிர்வு ஐயா .. மிக்க நன்றிகள். இன்றையக் காலக்கட்டத்தில் எத்தனைப் பேருக்கு இவை எல்லாம் தெரியும் சொல்லுங்கள் .

    தயவுடன் WORD VERIFICATION-ஐ நீக்கினால் சுபம். நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு.இக்பால் செல்வன்.

      'நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்'என திருமூலர் (பாடல்- 24, திருமந்திரம்)சொன்னதுபோல நான் அறிந்ததைப்பிறரும் அறிய பகிர்ந்துகொண்டேன்.எனினும், தங்களின் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கமளிக்கின்றது.

      'WORD VERIFICATION' என நீங்கள் குறிப்படுவது கருத்து பதிவதில் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றீர்கள் என எண்ணுகின்றேன்.அதற்குக் காரணம்,வீணாக கருத்திட்டு வம்பளப்பவர்களைத் தவிர்க்கும் நோக்கமன்றி வேறொன்றுமில்லை திரு.இக்பால் செல்வன்.

      Delete